மழை நாட்களில் எனக்குத் தேவை மழையைத் தவிர வேறு எதுவுமில்லை. மழையில் நனைந்து, மழையை ருசித்துத் மழையில் திளைத்து, மழையில் காய்ச்சல் ஏற்பட்டு, மழையினாலே சரியாகி, என மழைக்கும் எனக்கும் நெடுங்காலமாய் அழியாக் காதல் இருந்துவருகிறது. பொழிந்து கொண்டிருக்கும் மழையை எவ்வளவு நேரம் வேடிக்கைப் பார்த்தாலும் அலுக்கவே அலுக்காது எனக்கு - என்று சொல்லும் உமா சக்தியின் கவிதைகள் இங்கே .

வீடு  திரும்புதல் 

மரங்களும் சாலைகளும்

முடிந்துபோன ஓர் புள்ளியில் 

இருந்ததாய் ஞாபகம் 

எனக்கொரு வீடு 

எனது செளந்தர்யத்தையும்

இளமையும் எடுத்துக்கொண்டு

 தன் தனிமையும் துயரையும்

 திருப்பித் தந்தது அது 

ஆவேசமற்ற ஆற்றாமையுடன் 

அதனிடம் முறையிடும்போது 

இறுக சாத்திக்கொண்டது 

தன் கதவுகளையும் ஜன்னல்களையும்! 

வளையல்கள் உடைய ரத்தம் கசிய 

தட்டியும் ஒருபோதும் 

திறக்கவில்லை அவ்வாழ்வின் கதவுகள் 

மீண்டும் மீண்டும் வீடு திரும்புகிறேன். 

 (கல்கி இதழில்  வெளிவந்த கவிதை)

 

சக்திவேலும் சாவிகளும் 

எங்கே ஒளித்து  வைத்தாலும் சாவிகளின் வாசனை

சக்திவேலுக்குத் தெரிந்துவிடும்

அவற்றின்  ரகசிய இடங்களை

அவன் மட்டுமே  அவ்வளவுக்கு அறிந்திருப்பான்

வண்டிச் சாவி, வாயிற் சாவி

பழைய இரும்புப்  பெட்டியின்

மிகச் சிறிய  சாவி, பீரோ சாவி, வீட்டுச் சாவி...

என பூட்டே கூட இல்லாத பல சாவிகள் 

அவனிடம் உண்டு

மிரட்டல்களின் அச்சத்தில் தன்

சின்னக் கைகள்  நடுங்க திருப்பித் தருவான் 

பின் மீண்டும் மீண்டும் தஞ்சம் அடையும்  சாவிகளுக்கு

சாகாவரம்  தர தூர எறிந்தான் 

தன் பிஞ்சுக் கைகளை உதறியவண்ணம். 

(ஆனந்த விகடனின்  வெளிவந்த கவிதை)

 

இந்தக்  கவிதை 

இந்தக் கவிதை 

உடைந்து சிதறுமொரு

கண்ணீர்த் துளியிலிருந்து பிறக்கிறது

ரத்த வாடையில் தோய்ந்து வரிவரியாகிறது

சாவின் சாம்பலிலிருந்து  உருவாகிறது

அமைதியின் விதிகளின் மீது

கல்லெறிந்துக் கொண்டேயிருக்கும்

ஒரு நாட்டை நோக்கி வார்த்தைகளாய் 

வெடித்துச்  சிதறுகிறது..

யாரையும்  விட்டுவைக்காத காலத்தின்

கடைசிப் பக்கத்தில் எழுதப்படுகிறது

நிலையின்மையின்  இறுக்கத்தில்

வெந்து தணியும்  ஒரு பகல் பொழுதில்

தன்னைத் தானே வாசித்துக் கொள்கிறது..

எல்லா போலித்தனங்கள்  மீதும்

காறி உமிழ்ந்துவிட்டு  கடைசியில்

உங்கள் உள்ளங்கையில்

வந்து அமர்ந்திருக்கிறது... 

(ஈழம் சிறப்பிதழாக தை இதழில் வெளிவந்தது)

 

சிறிது  ஸ்பரிசம் கூட 

சிறிது ஸ்பரிசம் கூட நிகழமுடியாதவாறு

முழுவதும் அடைத்திருந்தேன் என் ஜன்னலை

இரக்கமில்லாமல் இறுக்கிப் பிடித்து

ஆவேசத்துடன் பொழிந்து தள்ளியது

நேற்றிரவில் உன் மழை.. 

(உயிரோசையில்  வெளியான கவிதை) 

 

முத்தம் 

காதல் சொன்ன  கணத்தில்

பெருமழையின் ருசியைவிட 

முதல் முத்தம்  ஈரமாய் இருந்தது

பனிக்காலம்  நெடுகிலும்

வார்த்தைகளைவிட  உதடுகள்

முத்தங்களையே 

உதிர்த்துக்கொண்டிருந்தது..

பின்னொரு  காதல் பருவத்தில்

இரவின் மெளனத்தை

உடைத்து திறந்து

உயிரை உயிர்  உறிஞ்சியது

கொடுங்கோடையின்  தகிப்பில்

புறக்கணிப்பின் முட்கள் கீறி

விடைபெற்றன  முத்தங்கள்

மரணத்தின் நெடியுடன்

எப்போதாவது  வாய்க்கும்

அந்தக் கடைசி  முத்தமும். 

(குமுதம்  தீபாவளி இலக்கிய சிறப்பிதழில்  வெளியான கவிதை)

 

காலிக்கோப்பை  மது 

அவள்

 அவன் எழுதக் காத்திருக்கும் கனவுத்தாள்

எவ்வளவு நிரப்பியும் நிறையாத காலிக் கோப்பை

வால் நட்சத்திரத்தின் மாயவசீகரம்

அவனால் புணரப்படாத ஆதி மனுஷி

 

அவன்

 வித்தைக்காரன் பழக்கிய சிறுத்தை

நெல்மணிக்கு ஆசைப்படும் கிளி

ஆழ்கடலில் ஒற்றைப் படகு

அவளால் உணரமுடியாத வாசனை

 

அவர்கள்

 சிறுத்தை தாளினை கடித்து துப்பியது

கிளி காலிப் கோப்பையில் மதுவை நிரப்பியது

வால் நட்சத்திரம் ஒற்றைப் படகில் விழுந்து எரிந்தது

எதேதோ வாசனை காற்றில் கலந்தது 

(ஆனந்த விகடனின்  வெளிவந்த கவிதை)

 

                            - கவிஞர் உமா ஷக்தி

 

 

Last Updated ( Friday, 20 November 2009 07:55 )